என் உயிரின் இரண்டாம் வசந்தம் ...
என் இரண்டாம் நிலா...
அவள் என் கருவறையில் உயிராய் உருவான நாளிலிருந்தே,
இறைவன் எனக்காக எழுதிய
அழகிய கவிதையின் அடுத்த அத்தியாயம் தொடங்கியது!
தாய்மை என்ற அன்பிற்கு எல்லைகள் இல்லை...
அதைப் பெருக்கிக் கொண்டே செல்ல முடியும்என்று எனக்கு உணர்த்தியவள் அவள்!
அவளின் குறும்புகள்,
அவளின் கள்ளமில்லாச் சிரிப்புகள்,
சிறு சிறு சேட்டைகள் ...
பல நேரங்களில் என்னை வாழ வைத்த மருந்துகள்!
முதல் குழந்தையின் வளர்ப்பில்
காலம் களவாடிய பல இனிய தருணங்களை,
இவளின் வளர்ப்பில்,
இறைவன் மீண்டும் எனக்குப் பரிசளித்தான்.
அவள் முதன் முதலில் கவிழ்ந்ததும்,
தவழ்ந்ததும்,
தத்தித் தத்தி நடந்ததும்,
“அம்மா” என்று அழைத்ததும் ,
இன்றும் என் நினைவுத் தோட்டத்தில்
வாடாத மலர்களாய்...
என் இதயத்தின் சுவற்றில்
அழியாத ஓவியங்களாய்!
சக மனிதர்களிடம் அவள் காட்டும் அன்பு,
அவர்களின் வலியை உணரும் கருணை,
வயதை மீறிய அவளின் முதிர்ந்த சிந்தனைகள் ...
பல நேரங்களில்
அவள்தான் எனது தாயோ...
எனக்கு வாழ்க்கையை கற்றுக் கொடுக்கிறாளோ என்று அதிசயிக்கிறேன்!
வாயில்லா உயிர்களிடம்
அவள் பொழியும் நேசத்தைப் பார்க்கும்போது,
“இவள் உண்மையிலேயே எனக்குப் பிறந்தவள்தானா?”
என்று சிரித்தபடியே வியக்கிறேன்.
விலங்குகளிடம்
அவள் காட்டும் பரிவைப் பார்க்கும் போது,
இறைவன் கருணையை
ஒரு பெண் குழந்தையின் வடிவத்தில்
எனக்கு அருளி இருக்கிறானோ என்று நெகிழ்கிறேன்!
விலங்குகளைக் கண்டு பயப்படும் என்னிடமிருந்து
அனைத்து உயிர்களையும் நேசிக்கும்
ஒரு இதயம் பிறந்திருப்பது
இன்றுவரை எனக்கு இனிய அதிசயமே!
இன்று அவளுக்குப் பதினாறு வயது...
ஆனால்,
என் மனதுக்கு
அவள் இன்னும்
என் கரங்களில் தாலாட்டிய
என் கைக் குழந்தையே!
நடனம் அவளின் ஆன்மாவின் மொழி,
பேக்கிங் அவளின் அன்பின் மணம்,
குதிரை ஏற்றம் அவளின் துணிச்சலின் சிறகு,
மருத்துவம் அவளின் கனவின் பாதை!
அவள் கனவு காணும் வானங்கள் அனைத்தையும்
ஒருநாள் தொட்டடைய வேண்டும்!
அவள் விதைக்கும் அன்பு
ஆயிரம் இதயங்களில் மலர வேண்டும்!
அவள் செல்லும் பாதைகள்
வெற்றியாலும், மகிழ்ச்சியாலும்,
மனநிறைவாலும் ஒளிர வேண்டும்!
அவள் நீண்ட ஆயுளோடும்,
நிறைவான ஆரோக்கியத்தோடும்,
அன்பு நிறைந்த உறவுகளோடும்,
சந்தோஷம் குறையாத வாழ்வோடும்
வாழ வேண்டும் என்பதே
ஒரு தாயாக எனது ஆசையும் வேண்டுதலும்!
அதையும் தாண்டி...
என் இரு மகள்களும்
நான் இல்லாத நாள்களிலும்
ஒருவரின் கண்ணீரை ஒருவர் துடைத்து,
ஒருவரின் மகிழ்ச்சியில் ஒருவர் மலர்ந்து,
ஒருவரின் தோளாக மற்றொருவர் இருந்து,
அன்பின் ஒரே மரத்தின்
இரு கிளைகளாய் வாழ வேண்டும் என்பதே
என் உயிரின் ஆழ்ந்த பிரார்த்தனை!
ஏனெனில்...
என் வாழ்க்கை என்னும் புத்தகத்தில்
நான் எழுதிய மிகச் சி
றந்த வரிகள்...
இறைவன் எனக்காக அருளிய
இரு அழகிய கவிதைகள்....
என் மகள்கள்!

No comments:
Post a Comment