Tuesday, January 9, 2024

நட்பு!

 

 நீ....

எனது உற்ற தோழனும் நீ...

எனது உயிரின் ஒற்றனும் நீ....

பல நேரங்களில் அன்னையாய் ...

பல நேரங்களில் தந்தையாய்...

சகோதரனாய்...சகோதரியாய்.....

நல்லாசானாய் ...சமயங்களில் அந்த ஈசனுமாய்...

உன் மீது நான் கொண்ட அன்பின் அளவு ....

நான் பெற்ற பிள்ளைகள் மீது கூட

நான் கொண்டிருக்கிறேனா?

சத்தியமாக எனக்கே தெரியாது....

இது எதுவும் நான் வேண்டும் என்று     செய்ததில்லை  ...செய்வதுமில்லை...

உன்னை அறிந்த நாளிலிருந்து

என்னில் நிகழ்ந்த மாற்றங்கள்...

என் வாழ்விற்கு  அவை அளித்த அர்த்தங்கள் ....

உன்னிடம் மிகுந்த நெருக்கம்

கொண்டவர்கள் மீது நான் கொண்ட சிறு பொறாமை கூட

உன் மீது நான் கொண்ட அன்பின் வெளிப்பாடே அன்றி

அவர்கள் மீது நான் கொண்ட வெறுப்பல்ல!

நானறிவேன்...

உனக்கு நான் பத்தோடு பதினொன்று ...

அனால் எனக்கோ நீ மட்டுமே ஒன்று !

என் அன்பினால் உன்னை நான்

இக்கட்டில் நிறுத்திய தருணங்கள் பல உண்டு...

ஆனாலும் நீ என்னை அன்பு செய்தாய்

மீண்டும் என் மேல் பரிதாபம் கொண்டு...

என் கற்பனைகளில் நான் சித்தரிப்பேன்

நமக்குள் நான் வேண்டும் என ஏங்கும்

நம் நெருக்கத்தை ...

எனக்கும் உன் வாழ்வில் உன் அருகில்

உரிமையாய் ஓரிடத்தை ...ஓர் உறவை...

கற்பனை தான் என்றாலும்

எனக்கு அது தரும் பெரும் மகிழ்ச்சியை...

அனால் ...

கற்பனைகளில் கூட

கள்ளமோ கபடமோ அற்ற

தூய உறவு நமது ...

நீ ...

எனக்கு பாரதியின் கண்ணனும் நீ ...

அவனது கண்ணம்மாவும் நீ ...

பாரதியையே புரியாத இந்த உலகம் ...

என்னை மட்டும் புரியுமா என்ன ?

எனினும்...

உனக்கு மட்டுமாவது

புரிய வேண்டும் என்பது என் ஆசை...

மொத்தத்தில் ...

உனக்கும் எனக்கும் வாய்த்த உறவு

ஊருக்கு புரியாதே...

இந்தப் பாவி உன்னை சுமக்கவில்லை

நானும் உன் தாயே !

 

20 Years....

 

உன்னுடனான இருபது  வருட வாழ்க்கை ...

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாய் ...

காதலும் மோதலும் ஊடலும் கூடலும் ...

கனவுகளும் கற்பனைகளும் நிஜங்களும் நிழல்களும்…

மேகங்களும் மழைகளும் இடிகளும் மின்னல்களும்

இரவும் பகலும் நிலவும் சூரியனும்…

கோவில்களும் பிரார்த்தனைகளும் ஆசிகளும் ஆறுதல்களும் ...

பிரச்சனைகளும் தீர்வுகளும் சர்ச்சைகளும் தீர்மானங்களும் ...

காயங்களும் மருந்துகளும் மாயங்களும் மந்திரங்களும் ...

இன்னும் பல ஆண்டுகள் இவை அனைத்தும் தொடரவும்…

நம்  பரஸ்பர அன்பு இன்னும் மெருகேறவும்...

ஐஸ்வர்யமும் தீக்ஷண்யமும் பல்கி பெருகவும் ...

கடவுளாகி விட்ட நம் முன்னோர்கள் யாவரையும்

வணங்கி வேண்டி ...

உன்னை எனக்களித்த இறைவனுக்கும்

நம்  பெற்றோருக்கும் நம் பிள்ளைகளுக்கும்

என் மனம் கனிந்த நன்றிகள்...

அன்பு சூழ் இவ்வுலகில்

என்னை சூழ்ந்த உன் அன்பு மட்டுமே நிரந்தரம்

என உணர்ந்த என் மனமார்ந்த நன்றிகள் !

 

 

 

 

 

 

 

 

 

அப்பா...

 

அப்பா...

உன்னை நான் கடைசியாக பார்த்தது 02.11.2019

 அன்று நீ கண்ணீருடன் எனக்களித்த பிரியாவிடை

இன்றும் ஆறா ரணமாக என் மனதில்

உன் உள்ளம் அன்றே உணர்த்திற்றோ

அது தான் நம் கடைசி சந்திப்பென?

நான் தான் அறியாமல் தவற விட்டேனோ உன்னை ?

டிசம்பர் 8 2019...

அலைபேசியில் திடீரென வந்திறங்கிய இடி ...

அன்று காலையில் கூட உன்னை அமீரகம் வரச்  சொல்லி 

எங்களுடன் சிறிது நாட்கள் தங்கச் சொல்லி உன்னுடன் நான் இட்ட சண்டை ..

மனதில் படமாக விரிய அலைபேசி செய்தியை மனம் நம்ப மறுக்க

ஏதும் புரியாத எதுவும் சொல்ல தோன்றாத அந்த சில நிமிடங்கள்

என்னால் இன்னமும் என்ன வாழ்நாள் முழுக்க மறக்க முடியாது....

என் சொல்வேன் என் மகள்களிடம் ...

அவர்களுக்காக என்னிடம் சண்டையிடும்...

அவர்களுக்காக என்னிடம் வாதாடி ஜெயிக்கும் ...

அவர்களின் ஆசைகளை சிரம் மேற்கொண்டு நிறைவேற்றும் ...

ஒரு ஆப்பிள் காகவும்

ஒரு ஐஸ் கிரீம்காகவும்

தூரம் பார்க்காமல் சென்று வாங்கி வரும் தாத்தா ...

வெகு தூரம் சென்று விட்டார் ...

திரும்பி வராத தூரம் சென்று விட்டார் ...

என்று எப்படி சொல்வேன் என் மகள்களிடம் ?

என நான் துடித்த துடிப்பு இன்றும் மாறவில்லை எனக்குள்…

ஒரு தொலைபேசி அழைப்பில்

என் குறைகளை கேட்டு ...

எனக்கு ஆறுதல் சொல்லி ..

எனக்காக கடவுளிடம் வேண்டி ...

என் புகுந்த வீட்டின் இஷ்ட தெய்வத்தை

நீயும் இஷ்டமாக்கி... விடாப்பிடியாக பிடித்து ...

எனக்காகவும் என் மக்களுக்காகவும் உருகி உருகி பிரார்த்தித்து

ஒவ்வொரு பண்டிகை நாளிலும்

முதல் தொலைபேசி அழைப்பையும் உனதாக்கி

வாழ்த்தி ஆசீர்வதித்து

என்னெல்லாம் செய்தாய் இன்று என கேட்டு

நான்  சொன்னதில் இருந்தே அதன்  சுவையை நீ உணர்ந்தார் போல் பாவித்து

என்னை பாராட்டி மகிழ்வித்து ...

சென்னையில் எனக்கு எந்த ஒரு வேலையாய் இருந்தாலும்

இதோ உடனே என்று சிறு பிள்ளையாய் மாறி

மழையோ வெய்யிலோ பாராமல்

ஓடி திரிந்து அந்த வேலையினை முடித்து

ஒரு வெற்றிச் சிரிப்புடன் எனக்கு அலை  பேசுவாய் ....

அந்த சிரிப்பும் அந்த அழைப்பும் எங்கே என ஏங்குகிறது  என் மனம் இன்று ...

நீ இருந்த போது இவற்றின் அருமை விளங்கவில்லை

என் மூட மனதிற்கும் மூளைக்கும்

நீ சென்று நாட்கள் நகர நகர

ஒவ்வொன்றாக நினைத்து

ஒவ்வொன்றாக எதிரொலித்து  

நித்தம் நித்தம் ஏங்கி தவிக்கிறது

இந்த துர்பாக்யவதியின் மனமும் மூளையும்....

இன்னும் கொஞ்சம் அப்பாவுடன் காலம் செலவழித்திருக்கலாம்

இன்னும் கொஞ்சம் அவரிடம் அன்பாக இருந்திருக்கலாம்

இன்னும் நிறைய விஷயங்களை அவரிடம் பேசி இருக்கலாம்

இன்னும் கொஞ்சம் நம் கையால் அவருக்கு சமைத்து போட்டிருக்கலாம்

இன்னும் கொஞ்சம் அவரை

 உணர்ந்திருக்கலாம்

இன்னும் இன்னும் என நிறைய ஏங்குகிறது

இந்த பாழ் மனம்….

கடைசியாக இன்னும் கொஞ்சம்

மன்னிப்பும் கோரி இருக்கலாம் உன்னிடம் அப்பா

மன்னித்து விடு அப்பா இந்த பாவி மகளை !

இருந்த போது உணராத உன் அருமையை

உன் பிரிவு ரொம்ப துல்லியமாக உணர்த்துகிறது அப்பா ....

மன்னித்து விடு அப்பா இந்த பாவி மகளை !

 

 

அம்மா நீ வேண்டும்...

 

அம்மா நீ வேண்டும்...

 

என்னுடைய நல்ல நாட்களில் நல்ல தருணங்களில் நீ வேண்டும்

என் மகள்களின் சாதனைகளை பகிர்ந்து கொள்ள

அவர்களின் அழகிய சிரிப்புகளில் மனம் மகிழ..

அவரகள் என்னை அணைக்கும் நொடிகளில்

என் சமையலை ரசித்து உண்ணும் வேளைகளில்

அவர்களின் நட்புக்காக அவர்கள் குரல் கொடுத்த பெருமையை  நான் பகிர ...

என்னிலும் அதிகமாக பெருமை கொள்ள நீ வேண்டும் ....

 

என் மகள்கள் எதிலோ தோல்வி உற்று

அவர்கள் வேதனையை என்னிடம் பகிர

நான் அவர்களை அணைத்து ஆறுதல் கூறும் நேரத்தில் ...

முடியாமல் தொடரும் நாட்களில் ...

அலுப்பாய் இருக்கும் நாட்களில் ...

எதையோ மறந்து தேடி தவிக்கும் தருணங்களில்...

தேடியதை மீட்டு தர நீ வேண்டும்....

 

சொல்லிக்கொள்ள எதுவும் இல்லாத நாட்களில்...

சொல்வதற்கு ஏராளமாய் இருக்கும் நாட்களில்,,,,

தனிமை கொள்ளும் நாட்களில்...

என்னை சுற்றி உறவுகள் கும்மி அடிக்கும் நாட்களில்....

இப்படி எல்லா நாட்களிலும் நீ வேண்டும்...

 

இன்று என் மகள்களுக்கு நான் அம்மாவாய் இருக்கும் நேரங்களில்...

அம்மா என்ற பொறுப்பின் சுமையை முழுதாய் உணரும் தருணங்களில்...

நெருக்கமாய் ஆதரவாய் அணைக்க ...

உன் மடியில் தலை வைத்து உறங்க...

அந்த கதகதப்பில் நிம்மதி காண

முன்னிலும் அதிகமாய்

முன்னிலும் முழுமையாய்  நீ வேண்டும்!