Tuesday, January 9, 2024

அப்பா...

 

அப்பா...

உன்னை நான் கடைசியாக பார்த்தது 02.11.2019

 அன்று நீ கண்ணீருடன் எனக்களித்த பிரியாவிடை

இன்றும் ஆறா ரணமாக என் மனதில்

உன் உள்ளம் அன்றே உணர்த்திற்றோ

அது தான் நம் கடைசி சந்திப்பென?

நான் தான் அறியாமல் தவற விட்டேனோ உன்னை ?

டிசம்பர் 8 2019...

அலைபேசியில் திடீரென வந்திறங்கிய இடி ...

அன்று காலையில் கூட உன்னை அமீரகம் வரச்  சொல்லி 

எங்களுடன் சிறிது நாட்கள் தங்கச் சொல்லி உன்னுடன் நான் இட்ட சண்டை ..

மனதில் படமாக விரிய அலைபேசி செய்தியை மனம் நம்ப மறுக்க

ஏதும் புரியாத எதுவும் சொல்ல தோன்றாத அந்த சில நிமிடங்கள்

என்னால் இன்னமும் என்ன வாழ்நாள் முழுக்க மறக்க முடியாது....

என் சொல்வேன் என் மகள்களிடம் ...

அவர்களுக்காக என்னிடம் சண்டையிடும்...

அவர்களுக்காக என்னிடம் வாதாடி ஜெயிக்கும் ...

அவர்களின் ஆசைகளை சிரம் மேற்கொண்டு நிறைவேற்றும் ...

ஒரு ஆப்பிள் காகவும்

ஒரு ஐஸ் கிரீம்காகவும்

தூரம் பார்க்காமல் சென்று வாங்கி வரும் தாத்தா ...

வெகு தூரம் சென்று விட்டார் ...

திரும்பி வராத தூரம் சென்று விட்டார் ...

என்று எப்படி சொல்வேன் என் மகள்களிடம் ?

என நான் துடித்த துடிப்பு இன்றும் மாறவில்லை எனக்குள்…

ஒரு தொலைபேசி அழைப்பில்

என் குறைகளை கேட்டு ...

எனக்கு ஆறுதல் சொல்லி ..

எனக்காக கடவுளிடம் வேண்டி ...

என் புகுந்த வீட்டின் இஷ்ட தெய்வத்தை

நீயும் இஷ்டமாக்கி... விடாப்பிடியாக பிடித்து ...

எனக்காகவும் என் மக்களுக்காகவும் உருகி உருகி பிரார்த்தித்து

ஒவ்வொரு பண்டிகை நாளிலும்

முதல் தொலைபேசி அழைப்பையும் உனதாக்கி

வாழ்த்தி ஆசீர்வதித்து

என்னெல்லாம் செய்தாய் இன்று என கேட்டு

நான்  சொன்னதில் இருந்தே அதன்  சுவையை நீ உணர்ந்தார் போல் பாவித்து

என்னை பாராட்டி மகிழ்வித்து ...

சென்னையில் எனக்கு எந்த ஒரு வேலையாய் இருந்தாலும்

இதோ உடனே என்று சிறு பிள்ளையாய் மாறி

மழையோ வெய்யிலோ பாராமல்

ஓடி திரிந்து அந்த வேலையினை முடித்து

ஒரு வெற்றிச் சிரிப்புடன் எனக்கு அலை  பேசுவாய் ....

அந்த சிரிப்பும் அந்த அழைப்பும் எங்கே என ஏங்குகிறது  என் மனம் இன்று ...

நீ இருந்த போது இவற்றின் அருமை விளங்கவில்லை

என் மூட மனதிற்கும் மூளைக்கும்

நீ சென்று நாட்கள் நகர நகர

ஒவ்வொன்றாக நினைத்து

ஒவ்வொன்றாக எதிரொலித்து  

நித்தம் நித்தம் ஏங்கி தவிக்கிறது

இந்த துர்பாக்யவதியின் மனமும் மூளையும்....

இன்னும் கொஞ்சம் அப்பாவுடன் காலம் செலவழித்திருக்கலாம்

இன்னும் கொஞ்சம் அவரிடம் அன்பாக இருந்திருக்கலாம்

இன்னும் நிறைய விஷயங்களை அவரிடம் பேசி இருக்கலாம்

இன்னும் கொஞ்சம் நம் கையால் அவருக்கு சமைத்து போட்டிருக்கலாம்

இன்னும் கொஞ்சம் அவரை

 உணர்ந்திருக்கலாம்

இன்னும் இன்னும் என நிறைய ஏங்குகிறது

இந்த பாழ் மனம்….

கடைசியாக இன்னும் கொஞ்சம்

மன்னிப்பும் கோரி இருக்கலாம் உன்னிடம் அப்பா

மன்னித்து விடு அப்பா இந்த பாவி மகளை !

இருந்த போது உணராத உன் அருமையை

உன் பிரிவு ரொம்ப துல்லியமாக உணர்த்துகிறது அப்பா ....

மன்னித்து விடு அப்பா இந்த பாவி மகளை !

 

 

No comments:

Post a Comment