இந்தப் பிரபஞ்சத்தில்
எல்லா உணர்வுகளுக்கும்
பெயர் சூட்ட முடியாது!
சில வேளைகளில்
காரணமின்றி ஒரு பாரம்
இதயத்தில் தங்கிவிடும்;
சில நேரங்களில்
கண்கள் பனித்தாலும்
அழுகை பிறக்காது!
ஒரு பாடலின் வரியில்,
மழைத்துளியின் ஒலியில்,
பழைய நினைவின் வாசனையில்
இதயத்தின் ஓரத்தில் ஓர்
மெல்லிய அதிர்வு எழும்!
அதை சொல்ல முயன்றால் தான் தெரியும்..
அந்த உணர்வை வர்ணிக்க
வார்த்தைகள் இல்லை என்பது!
சில நேரங்களில் வார்த்தைகள்
நாம் சொல்ல வருவதைச் சுருக்கி
அதன் ஆழத்தை இழக்கச் செய்கின்றன!
“எனக்கு வலிக்கிறது” என்றால்
அந்த வலியின் ஆழம்
யாருக்கும் எட்டாது!
“நான் உன்னை நேசிக்கிறேன்” என்றால்
அந்த அன்பின் தீவிரம்
முழுமை பெறாது!
சில உணர்வுகள்
மௌனத்தில் தான்
அழகையும், புனிதத்தையும்
பெறுகின்றன!
அவை சொற்களாகும் போது
அதன் உயிர்
மெல்ல மெல்ல தேய்கிறது.
விவரிக்க முடியாத தவிப்பும்...
சொல்ல முடியாத ஏக்கமும்...
அதுவே,
நம்மை மனிதனாக்குகிறது.
யாருக்காகவோ காத்திருக்கும்
அந்த இனிய வலியும் ,
பிரிவின் வெற்றிடமும்,
காரணமற்ற தனிமையும்,
அவற்றை விளக்க முயல்வதை விட
உணர்வதே சுகம்!
எல்லாவற்றையும்
புரிய வைக்க வேண்டியதில்லை;
சில உணர்வுகள்
நமக்கும்
நம்முடைய அந்தரங்கத்திற்கும்
மட்டுமே சொந்தமானவை!
அந்த மௌனத்தைப்
புரிந்துகொள்ளும் ஒரு இதயம்
கிடைத்தால்,
அங்கே
வார்த்தைகளுக்கு
வேலையே இல்லை!

No comments:
Post a Comment