Tuesday, May 26, 2026

அம்மா....

 அம்மா...

நீ இந்த உலகை விட்டுப் பிரிந்து

பத்தொன்பது ஆண்டுகள் ஆகிறது…

ஆனால் என் மனம் மட்டும்

இன்னும் உன் மடியில்தான் வாழ்கிறது…

காலங்கள் நகர்ந்துவிட்டன..

வீடுகள் மாறிவிட்டன...

வாழ்க்கைப் பல முகங்களைக் காட்டிவிட்டது...

ஆனால்

பவா என்று

அன்பு உருக அழைத்த உன் குரலை

என் உள்ளம் இன்னும் தேடிக்கொண்டே இருக்கிறது!

நான் தவறு செய்த நாட்களிலும் கூட

என்னைத் தண்டிக்காமல்,

என் கண்ணீரைத் துடைத்து 

அன்பினால் என்னைத் திருத்திய 

தேவதை நீ!

உன் கோபத்திற்குக் கூட

கருணையின் வாசனை இருந்தது அம்மா!

நான் உடைந்து போகாமல் இருக்க

உன் இதயத்தையே மெத்தையாக விரித்தவள் நீ!

உன் கைகளால் சமைத்துப் பரிமாறிய உணவுகளில்,

சுவை மட்டும் இல்லை…

அன்பும் பாசமும் நேசமும் இருந்தது!

சோர்ந்து போன ஆன்மாவைக் கூட 

மீண்டும் உயிர்ப்பிக்கும்

தாயன்பின் தூய மணம் இருந்தது!

நடனத்தை நான் ரசிக்கக் கற்றது

உன் கண்களின் வாயிலாக!

தமிழை நான் காதலிக்கத் துவங்கியது

உன் வார்த்தைகளின் வழியாக!

என் காதலின் இரகசியங்களுக்குக் கூட

நீ தான் முதல் தோழி!

என் இதயத்தின் கதவுகளை

முழுமையாகத் திறந்து பார்த்து 

முற்றிலுமாக என்னை அறிந்த 

ஒரே ஜீவன் நீ!

என் கணவருக்கும்

உனக்கும் இருந்த அந்த அழகிய நட்பு..

உங்கள் இருவரின் பார்வை பரிமாற்றம்...

நான் சிறிதும் பொறாமைப் படாத

அழகிய காதல் கதை!

உன் உயிரின் இறுதி ஒளிவரை

உன்னை இந்த உலகில் பிடித்துவைத்த

ஓர் பிணைப்பு...

உனக்கு நான் அளித்த ஒரே பரிசு...

என் மகள்!

அவள் சாப்பிடும் வரை

நீ உணவைத் தொட மாட்டாய்!

அத்தனை வலி வேதனைகளிலும் 

உன் கண்களில் படரும் ஒளி

அவளுக்காகவே!

சிறு சிறு சந்தோஷங்களில் கூட

பேரானந்தம் கண்ட

அல்ப சந்தோஷி நீ…

மழை வாசனையில் மகிழ்ந்தாய்…

குழந்தையின் சிரிப்பில் கரைந்தாய்…

ஒரு பூவின் மலர்ச்சியிலும் கூட

வாழ்க்கையின் அர்த்தம் கண்டாய்…

அதனால் தான் அம்மா…

உன்னைச் சந்தித்தவர்கள் யாரும்

உன்னை மறக்கவே இல்லை!

உன்னுடன் பழகிய யாரும்

உன்னை வெறுக்கவே இல்லை!

உன் அன்பு

அவர்களின் நினைவுகளில்

இன்றும் அணையா விளக்காய் !

ஆனால் அந்தக் கொடியகேன்சர்…

உன் உடலை மெதுவாக வதைத்தது…

நீ சிரித்துக்கொண்டே வலியை மறைத்த நாட்கள்

இன்றும் என் இதயத்தை நொறுக்குகின்றன…

மரணம் கூட

இவ்வளவு அழகான ஒரு ஆன்மாவை

எப்படி எடுத்துச் சென்றது என்று

இன்றுவரை எனக்குப் புரியவில்லை…இன்றும் பல இரவுகளில்

உன் மடியைத் தேடும் என் மனம்!

என் தலைமுடியை வருடும் 

உன் விரல்களுக்காக

ஏங்கும் என் உயிர்!

பத்தொன்பது ஆண்டுகள் கடந்தும்

உன் பிரிவு மட்டும்

என் உள்ளத்தில் ஆறாத் துயராக!

அம்மா,

சில உறவுகள்

இறப்பால் முடிவதில்லை…

அவை

நம் நினைவுகளின் ஒவ்வொரு மூலையிலும்,

நம் கண்ணீரின் உப்பிலும்,

நம் ஒவ்வொரு அசைவிலும் ,

நிழலாய் வாழ்ந்து கொண்டே இருக்கும்!

நீயும் அப்படித்தான்…

என் வாழ்வில் மறைந்தவள் அல்ல...

என் உயிரோடு கலந்த

நித்தியமான அன்பு!

அம்மா இறப்பதில்லை...

நம் நினை

வுகளின் ஊடே...

நம் மூச்சின் உள்ளே ...

நம் பிள்ளைகளின் வழியே...

வாழ்ந்து கொண்டே இருப்பாள்!


No comments:

Post a Comment