ஒரு பெண்ணின்
நிசப்தமான இரவுகளில்
தலையணை மட்டும் அறிந்திருக்கும் ரகசியம்
தனிமையின் பயமல்ல…
தன்னையே தொலைத்து விடக்கூடாதென்ற
மௌனப் பிரார்த்தனை.
ஒருகாலத்தில்
அவள் அஞ்சியது
கனவுகளை மடித்து
பழைய சேலைகள் நடுவே
அலமாரியின் இருளில் வைக்க நேருமோ என்று.
ஆனால் இன்றைய பெண்
கனவுகளை மடிக்கக் கற்றுக்கொள்ளவில்லை;
அவற்றுக்குச் சிறகுகள் தைத்து
வானத்தில் விடக் கற்றுக்கொண்டாள்!
அதே பழைய சேலையின் நுனியில் கூட
புதிய விடியலின் நிறங்களைத் தைத்து அணிகிறாள்!
காதல் இல்லாத வீட்டின்
கடமைகளின் சலசலப்புக்குள்
தன் சிரிப்பு கரைந்து போகாமல்,
அதே சிரிப்பால்
வீட்டையே வசந்தமாக்கக் கற்றுக்கொண்டாள்!
குழந்தைகளின் நாளைகளைக்
கைகளில் தாலாட்டிக்கொண்டிருந்தாலும்,
தன் கனவுகளையும்
இதயத்தின் ஆழத்தில்
தீப் பொறியாக்கிக் கொண்டாள்!
அனைவருக்கும் எல்லாமாக இருப்பவள்
தனக்காகவும் தானே
திறம்பட இருக்கிறாள்!
சமையலறை வாசத்திலும்
அழுகையை மறைத்த சிரிப்புகளிலும்
தன்னையே தான் செதுக்கிக் கொண்டாள்!ஒருநாள் கண்ணாடி முன் நின்று
“இவள் யார்?” என்று
தவிப்பதில்லை...
“இவள்தான் நான்” என்று
தலை நிமிர்ந்து தன்னைத் தானே
ரசித்துக் கொள்வாள்!
பெண்கள் விரும்புவது
வெறும் திருமணம் அல்ல…
உயிர் முழுதும் மலரச் செய்யும் வாழ்க்கை.
அவர்கள் தேடுவது
வெறும் பாதுகாப்பல்ல…
சிறகுகளை மடிக்கச் சொல்லாத அன்பை!
அவர்கள் வேண்டுவது
பொன் கூண்டல்ல…
மழையையும், காற்றையும், சுதந்திரத்தையும் தழுவி
தாங்களே தேர்ந்தெடுக்கும் ,
விரிந்து பரந்த வானை!
இன்றைய பெண்களின் மிகப் பெரிய பயம்
மறைந்து போவதல்ல…
தங்களை மறந்துவிடுவதே!
அதனால் தான்
இப்போது அவர்கள் விரும்புவது
மற்றவர்கள் எழுதிய கதையில்
ஒரு பாத்திரமா
வதைஅல்ல…
தங்கள் உயிரின் மொழியில்
தாங்களே ஒரு காவியமாவதை!

No comments:
Post a Comment