Tuesday, May 26, 2026

நம்பிக்கை

 


கடந்த இரண்டு ஆண்டுகள்...

காலண்டரில் தேதிகள் மாறினாலும்,

எங்கள் வாழ்க்கையில்

மாறியது மருத்துவமனை வாசல்களும் , 

அறைகளும், மருத்துவர்களும் தான்!

வெள்ளைச் சுவர்களின் நடுவில்

எங்கள் நாட்கள் அடைபட்டுப் போயின!

மருந்தின் வாசனையில்

நம்பிக்கையும் சோர்வும்

ஒற்றை மூச்சாய் நின்று போயின!

வலிகள் மட்டும்

எங்களை விட்டுப் போகாமல் 

பிடிவாதத்துடன் !

ஒரு காலத்தில் இயல்பான சிரிப்பு...

இன்றோ பெரும் முயற்சியாக ...

முயல்வதே அயர்ச்சியாகவும்!

எதுவும் பிடிக்கவில்லை..

எதிலும் மனம் நிலைக்கவில்லை...

உலகம் முழுவதும் ஓடிக்கொண்டிருக்க,

நாங்கள் மட்டும்

நேரம் நின்று விட்ட 

 ஒரு மூலையில் சிக்கியபடி....

சில நேரங்களில்

எல்லாவற்றையும் விடுத்த

ஓர் நீண்ட தூக்கத்திற்கு

மனம் ஏங்குகிறது!

சொல்ல வார்த்தைகள் இருந்தும்

கேட்க யாருமில்லாத அமைதி... 

மௌனத்தையும்புரிந்து கொள்ள

ஒரு இதயம் தேடுகிறது!

இது எல்லாம் முடிந்தால் போதும்

என்று ஒரு சின்ன குரல்

உள்ளுக்குள் எழுந்தாலும்,

மற்றோர் குரல்

இது முடிவல்ல…

இன்னும் விடியல் இருக்கிறது

என்று நம்பிக்கையின் விளிம்பில்

ஊசலாடுகிறது!

ஒரு நாள்..

இந்த வெள்ளைச் சுவர்கள் நினைவாகி,

இந்த வலிகள் கதையாகி,

நாம் மீண்டும்

வாழ்க்கையை உணரக் 

 கற்றுக்கொள்வோம்!

அந்த நாளுக்காக ,

நான் இங்கேயே நிற்கிறேன்...

மூச்சு விடுகிறேன்…

சிரிக்க முயல்கிறேன்...

சற்றே உடைந்திருந்தாலும்,

நம்பிக்கை எனும் உளியோடு 

காத்திருக்கிறேன்!

No comments:

Post a Comment