என் முதல் காதலுக்கு
ஐம்பதாவது பிறந்த நாள்!
காலம்
அவன் நெற்றியில் சில வெள்ளிக் கோடுகளை வரைந்திருந்தாலும்,
என் மனதின் தோட்டத்தில்,
அவன் இன்னும்
மழையில் நனைந்த அந்தச் சிறுவனாகவே இருக்கிறான்!
என் அத்தை மகன் அவன்…
ஆனால் உறவுகளின் பெயர் தெரியும் முன்பே...
எங்கள் ஆன்மாக்கள்
ஒருவரை ஒருவர் அறிந்திருந்தன!
சிறு வயதில்...மாலைகளில்...
ஒரே மொட்டை மாடியில்
நட்சத்திரங்களை எண்ணிய நாட்கள்…
ஒரே காற்றில் சிரித்து...
ஒரே தூறலில் நனைந்து...
ஒரே பாடலில் கரைந்து...
ஒரே அமைதியில் அழுத காலங்கள்…
அவன் கண்களில்
சிறு மேகம் வந்தால்...
என் இதயத்தில் மின்னல் வெட்டும்!
நான் பேசாமல் மௌனம் காத்தால்...
என் வலியை அவன் உணர்ந்து விடுவான்!
என் மூச்சின் வேகத்தில் கூட...
அவனது நிதானம் வீசும்!
அவ்வளவு ஆழமான புரிதல்…
வார்த்தைகள் தேவையில்லாத அன்பு…
இரண்டு உடல்களில் துடித்த
ஒரே உயிர் போல…
எங்கள் இருவரின் விழிகளும்
கண்ட ஒரே கனவு...
ஓர்நாள் ...
ஒரே வீட்டின் வாசலில்..
மாலைத் தேநீர் குடித்தபடி..
இயற்கையை ரசிக்கும்...
ஓர் முதிர்ந்த தம்பதிகளாக...
நாங்கள் இருவரும்!
ஆனால்
வாழ்க்கை எல்லா காதல்களுக்கும்
அழகிய முடிவை எழுதுவதில்லை!
சிலரின் சூழ்ச்சிகள்…
சில காலங்களின் கொடூரம்…
சில குடும்பங்களின் கட்டாயங்கள்…
எங்கள் கைகளை மெதுவாகப் பிரித்துவிட்டது!
நான்
வேறு ஒருவரின் வாழ்க்கையாகிவிட்டேன்…
அவன்
வேறு ஒருத்தியின் உலகமாகிவிட்டான்…
இன்று
எங்களிருவருக்கும்
அழகான குழந்தைகள் உண்டு…
அன்பு நிறைந்த வாழ்க்கைத்துணைகள் உண்டு…
வெளியில் பார்க்கும் போது...
எல்லாமே நிறைவாகத்தான் !
ஆனால்
இதயத்தின் மிக ஆழத்தில்
யாரும் திறக்காத ஒரு அறை இருக்கிறது…
அங்கே இன்னும்
எங்கள் காதல் ஆசனமிட்டு அமர்ந்திருக்கிறது...
மறக்க முடியாத புனிதமாக!
நாங்கள் பிரிந்த நாள்
மௌனமாக அழுகிறது!
ஆறாத ரணமாக !
இன்று வரை...
எங்கள் அன்பு...
எந்த எல்லையையும் மீறவில்லை!
ஆனால் அதன் ஆழமும் மாறவில்லை!
மாறாக..
தொலைவில் நின்றபடியே..
ஒருவரின் நலனுக்காக...
மற்றொருவர் தினமும் பிரார்த்திக்கும்
அமைதியான தேவதையாக மாறிவிட்டது!
அவன் சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும்…
அவன் மனம் எப்போதும் அமைதியாக இருக்க வேண்டும்…
அவன் வாழ்வு
மழைக்குப் பிறகான நிலம் போல
என்றும் பசுமையாக இருக்க வேண்டும்…
என்று
என் இரவுகள் இன்னும்
இறைவனிடம் மெதுவாக வேண்டிக்கொள்கின்றன!
ஏனெனில்,
சில காதல்கள்
கணவன் மனைவியாக முடியாமல் போனாலும்,
ஒரு வாழ்நாள் முழுவதும்
மனதின் உள்ளார்ந்த பிரார்த்தனையாகவே
தொடர்ந்து வாழ்கின்றன!
எங்கள் காதலைப் போல!

No comments:
Post a Comment