Tuesday, January 9, 2024

பாட்டி...பாலாம்பாள் எல்லார்வி!

பாட்டி...

 

பாலாம்பாள் எல்லார்வி....

 

எனக்கு நினைவு தெரிந்த நாள் முதலாய் ஒன்பது கஜம் புடவையும், வெள்ளை நிறத்தில் அக்கோபஹ் வேலைப்பாடு செய்த ப்ளௌஸ் உம், பரபரவென்ற தலை முடியும், நெற்றியில் சின்னதாய் ஒற்றை கீற்று விபூதியும், செருப்புகள் அணியாத கால்களும், விலுக் விலுக்கென்ற வேகமான நடையும், அதே வேகத்தில் அமைந்த பேச்சும் இவையெல்லாமும் பாட்டியின் சிறப்பம்சங்கள். கல்லுரலில் மாவாட்டினாலும் Wet  Grinderil மாவாட்டினாலும் , வீட்டின் அடி பம்பில் தண்ணீர் இறைத்தாலும் தெருவிலிருந்து தண்ணீர் சுமந்து வந்தாலும், மஹாளய அமாவாசையில் தாத்தாவின் திதிக்கு சமைத்தாலும் காணும்  பொங்கலுக்கு  ஒட்டு மொத்த குடும்பத்திற்கு கலந்த சாதமும் அவள் கையாலேயே பிழிந்த கருவடாம் பொறித்தாலும் எல்லாவற்றிலும் ஒரு வேகமும் லாவகமும்  . வருடாந்திர மளிகை சாமான் வாங்குவதிலும்  அலுப்பே தட்டாமல் வெயிலில் காய வைத்தும் டப்பாக்களை மாற்றியும் அவற்றை preserve செய்யும் பாங்கும், அஞ்சறை பெட்டியிலும் மளிகை சாமான் டப்பாக்களிலும் ஒளித்து வைத்த பணமும், யாருக்கு எப்போது தேவையோ அப்போது அதை எடுத்து கொடுக்கும் மனமும் , ஒரு அவசர தேவை என்றால் தனக்கென உதவக்கூடிய சுற்றமும் நட்பும் , "நான் சொன்னேன்னு சொல்லு தர்மா சித்தி தருவா" தனக்கே உரிய பாணியில் உதவும் செயலும் - இன்றளவிலும் நான் அறிந்த Best Financial Advisor   அவள் மட்டுமே!

என்னதான் அவளுக்கு மற்ற பேரன்களும் பேத்திகளும் இருந்தாலும் எனக்கும் அவளுக்குமான பிணைப்பு தனி! சிறு வயது முதலே அம்மா பள்ளிக்கூடத்தில் இருந்ததால் நான்  அரை நாள் பள்ளி முடிந்ததும் பாட்டியின் வீட்டுக்கு தான் செல்வேன்.  அவளுடைய சமையலுக்கு பெரும் விசிறி நான். பரங்கிக்காய் வத்தக்குழம்பும், வெள்ளை வெளேரென்று இருக்கும் முட்டைகோஸ் பொரியலும், புளிக்காய்ச்சலும் , மல்லிகைப்பூ இட்லியும், கண்ணாடி போல் மெலிந்த சப்பாத்தியும், அவள் கையால் அரைத்த இட்லி மிளகாய் பொடியும் இன்னும் எத்தனை எத்தனை ... அவள் கையால் போடும் பழைய  சாதமும்  பச்சை வெங்காயமும் கூட தனி சுவை தான்! பசிக்கறது பாட்டி என்றால் உடனே தட்டை போட்டு பழைய சாதமும் சற்றே புளித்த மோரும் வரும் . தொட்டுக்க என்றால் instant reply - ஆங் கட்டைவிரல்! பாட்டியின் famous dialogue!

பள்ளி நாட்களில் மார்கழி மாதங்களில் விடியற் காலை வீதி பஜனையும் அங்கிருந்து நடந்து நாரத காண சபாவில் பஜனையும் எனக்கும் பாட்டிக்குமான நெருங்கிய தருணங்கள். தன்னுடைய பிரசாதத்தையும் எனக்கே கொடுத்து விட்டு காலையில் குடித்த ஒரு காபியோடு மதியம் வரைக்கும் இருப்பாள். ஞானானந்த ஸ்வாமிகளின் ஆராதனைக்கு பாட்டிக்கு நான் துணையா அல்லது எனக்கு பாட்டி துணையா என்று தெரியாது ஆனால் நாங்கள் இருவரும் தான் கூட்டணி. அது தாஸப்ரகாஷில் நடந்தாலும் சரி தென்னாங்கூரில் நடந்தாலும் சரி. மணி மாமாவை விட்டு பாட்டி பிரிந்து இருந்த நீண்ட நெடிய நாட்கள் அவை மட்டுமே .   அப்போதும் மணியை உங்காத்துல வெச்சுக்கரியா ராஜீ இல்ல நீயா விஜி என்று அவரது  பொறுப்பை யாருக்காவது தந்த பின்னரே சமாதானம் அடைவாள்.

Gayathri Lending Library - அந்த நூலகத்தில் நான் முதல் முதல் எடுத்த நூலிலிருந்து கடைசியாக எடுத்த  நூல் வரையில் பாட்டியின் account தான்.லக்ஷ்மியும் வாஸந்தியும்ரமணிச்சந்திரனும் சுஜாதாவும் தேவிபாலாவும் சுபாவும் எண்டமூரி வீரேந்திரநாத்தும் Mills & Boons உம் என் வாழ்வில் நுழைந்தது அவளால் தான் . எடுத்த புத்தகத்தை யார் முதலில் படிக்கிறோம் என்ற போட்டி ...அதிலும் பாட்டி வேகம் தான் . மதிய நேரத்தில் வாசற்படியில் சாய்ந்து காலை நீட்டியபடி அவள் அமர்ந்து படிக்கும் அழகு இன்றும் என்  கண்களில் .

வாழ்வின் மிகக் கடினமான  தருணங்களில், குஞ்சுகளை அடைகாக்கும் கோழியைப் போல் அவள் என்னைக் காத்தாள் என்றால் அது மிகையாகாது . நான் பள்ளியிலிருந்து வருவதற்கு கொஞ்சம் தாமதமானாலும் பாதி வழியில் அவளை பார்க்கலாம். கால்களில் செருப்பும் இல்லாது பிளக்கும் வெய்யிலில் என்னைத் தேடி வந்து கொண்டிருப்பாள் . ஏன் பாட்டி வெயில்ல அலையுற என்றால் உன்னை காணும் அதான் வந்தேன் என்பாள் . பாட்டிக்கு கொஞ்சத் தெரியாது . அனால் என்னைத் தேடி வரும் பரபரப்பில் அவள் அன்பை உணர முடியும். அப்படி அதை நான் உணர முடிந்தது என் பாக்கியம் ! 

தெரு முனையில் இருக்கும் நாட்டு மருந்துக் கடையில் சீயக்காயும் அதனுடன் சேர்த்து அரைக்க ரோஜா மொட்டும் இன்னும் ஏதேதோ பொருட்களும் வாங்கி மில்லில் அரைத்து வைத்து விடுவாள் . சனி கிழமை தோறும் எண்ணெய் தேய்த்து ஊற வைத்து பரபரவென்று சீயக்காய் தேய்த்து தலை அலசி  விடுவாள். அவளால் முடியாத  போது  என் அம்மா செய்யவில்லை என்றால் கோவம் வரும். உனக்கே ஏழு கழுதை வயசாறதோன்னோ நீயே பண்ணிக்க கூடாதா என்ற கோவத்தில் இருந்தது என் மீதான அன்பும் அக்கறையும் மட்டுமே. என் தலை முடி நல்ல சுருள் சுருளாக அடர்த்தியாக இருந்தது அவள் கண்காணிப்பில் நான் இருந்த வரை மட்டுமே.

என் திருமண நிச்சயத்தில் என் மாமியார் எனக்குப் போட்ட வைர மூக்குத்தி தண்டு பெரிதாக இருந்ததால் எனக்கு மூக்கு வீங்கி கடும் வலி. அலுக்காமல் அந்த மூக்குத்தியை ஆச்சாரியிடம் கொண்டு அங்கேயே மூன்று மணி நேரம் உட்கார்ந்து சரி செய்து வந்தாள். ஏன் அம்மா குடுத்துட்டு வந்திருக்கலாமே என என் அம்மா கேட்டதற்கு ஐயோ குழந்தைக்கு வந்திருக்கற முதல் வைரம் அப்படி குடுத்துட்டெல்லாம் வருவேனா என பதில் வந்தது அவளிடமிருந்து. என்னுடைய நிறைய முதல்கள் பாட்டியுடன் தான். 

நான் முதல் முறை கருவுற்றதை என் அம்மாவிடமும் பாட்டியிடமும் சேர்த்து தான் சொன்னேன். இரண்டாம் முறை கருவுற்ற போது பாட்டி தான் என் அம்மாவாகவும் இருந்தாள். நீ துபாய்ல இருக்கியேடி கண்ணா இங்க இருந்திருந்தா நானே பிரசவம் பார்த்திருப்பேன் சரி நீ இங்க வந்துடு நான் பாத்துக்கறேன் . அன்று சொன்ன வார்த்தைகள் இன்றும் என்னை பார்த்தால் அவள் சொல்வது இது தான் நீ இங்கயே வந்துடு நான் சமைச்சு போட்டு உன்னையும் குழந்தேளையும் பாத்துக்கறேன் . என் முதல் மகள் பிறந்து நான்கு மாதங்கள் வரை தினமும் என் அம்மாவின் வீட்டுக்கு வந்து குழந்தையைக் குளிப்பாட்டி விடுவாள். மூன்று தெருக்கள் தாண்டி இரண்டு மாடி ஏறி அலுக்காமல் வருவாள் . உள்ளே நுழையும்போது "ஏண்டி இப்படி படுத்தறேள் என்னை . வெந்நீர் ரெடியா கொண்டா குழந்தையை" தினமும் வரும் வார்த்தைகள். ஆனாலும் நாள் தவறாமல் வந்து விடுவாள்.  

பத்து மாதக் குழந்தையாக இருந்த போது  என் இளைய மகள் பாட்டியின் கையால் அரைத்த மாவில் இட்லி உண்ணப் பழகினாள் . என்றாவது ஓர் நாள் கடை மாவில் செய்த இட்லியை ஊட்டினாள் பூ வென்று துப்பிவிடுவாள் . பாத்தி இட்டி வேணும் என்பாள் . இன்றளவும் பாலம் பாட்டி மிளகாய் பொடிக்கு ஈடு இணை கிடையாது என் மகள்களுக்கு. மிளகாய் பொடி  பாட்டி தான் சின்னவள் அவளை அழைக்கும் பெயரே.  பாலம் பாட்டி மாதிரி மோர்க்குழம்பு பண்றியா அப்போ தான் நான் சாப்பிடுவேன் - நான் மட்டும் அல்ல என் மகள்களும் அவள் சமையலுக்குப் பரம விசிறிகள்.

இப்படி பாட்டியை பற்றி கட்டுரை அல்ல கதையே எழுதலாம். இது அவளோடான என்னுடைய சில நினைவுகளே . அவள் வாழ்வில் இருக்கும் ஒவ்வொருவரும் எழுதினால் அதை ஒரு Mega Serial ஆகவே எடுக்கலாம். அப்படி ஒரு சுவாரசியமான அன்பே உருவானவள் அவள். அவளால் வாழ்வு பெற்றவர்கள் பயன் பெற்றவர்கள் ஏராளம் . 

அவள் எனக்கு பாட்டி ஆனது ..இல்லை நான் அவளுக்கு பேத்தியாகப்  பிறந்தது என் பூர்வ ஜென்ம புண்ணியம். கடவுள் அருள் இருப்பின் அவளில் பாதியாக நான் என் பேரக் குழந்தைகளுக்கு இருக்க முடிந்தால் கூட அதுவே பெரும் பேறு .

இன்றும் பூவே பூச்சூடவா படம் பார்க்கும்போது என் கண்கள் கலங்கும்... பாட்டிக்கு முன்னால் நாம் போய்விட வேண்டும் என்று நினைப்பு வரும்... உடனே இல்லை அது நியாயம் இல்லை அவள் ஏற்கனவே அவ்வளவு இழப்புகளைப்  பார்த்து விட்டாள் நாமும் அந்த வலியை அவளுக்குத் தரக்கூடாதென்று தோன்றும். இன்று எதுவும் புரியாத நிலையில் ஓர் குழந்தையைப் போல் அவள் இருக்கும் நிலையில் அருகிருக்க முடியாத என்  சூழ்நிலை தவிர்க்க முடியாதது எனினும் என்னால் என்னை மன்னிக்க முடியவில்லை. இன்றைய அவளது நிலை கடவுள் யாருக்கு அளித்திருக்கும் தண்டனை என்று தெரியவில்லை. கடவுளிடம் என்ன வேண்டுவது என்று கூட சில நேரங்களில் புரிவதில்லை.

மொத்தத்தில் அவளை நினைக்கும் போதெல்லாம் என் மனதில் எழும் வரிகள் :

அன்புக்கு நீ அரிச்சுவடி  ; அன்னைக்கு மேல் செல்லமடி;

மழலையில் நான் சாய்ந்த மடி முதுமையிலும் வேண்டுமடி!

16 comments:

  1. பாட்டியுடன் அனுபவித்த ஆனந்தம், அதை படிக்க படிக்க பேரானந்தம். அதை வார்த்தைகளால் சொல்ல இயலாது. நம்மிடம் இருப்பத அவள் நினைவும் ஆசியும் தான்.

    ReplyDelete
  2. எத்தனை நினைவுகள்!!!படிக்க படிக்க அவரின் பிம்பத்தை அப்படியே கண் முன் நிறுத்திவிட்டீர்களே!! இந்த நினைவுப் பகிர்தலே இப்படி என்றால் உங்கள் பாட்டியுடன் எத்தனை பிணைப்பு என்பதை புரிந்து கொள்ளமுடிகிறது.. பாட்டி. is always special..

    ReplyDelete
    Replies
    1. நன்றி Sharada! ஆமாம் பாட்டி என் இன்னொரு அம்மா...Actually என் அம்மாவை விட அதிக காலம் நான் இருந்தது அவளுடன் தான்! She is my first love and forever love!

      Delete
  3. nice writeup. able to understand the characteristics of your patti through your words. Please continue to write.

    ReplyDelete
  4. எதை எடுப்பது எதை விடுப்பது என்பது போல எந்த வரியை எந்த சம்பவத்தை பாராட்டுவது என்ற குழப்பம்.மொத்தமாய் பாராட்டுகிறேன்.இதை விட சிறப்பாக ஒரு பாட்டி பேத்தி பாசத்தை புரிதலை பிரிவின் ஏக்கத்தை வலியை விவரிக்க முடியாது. கடைசி சில வரிகள் மட்டும் கவிதை அல்ல. மொத்த வரிகளும் அழகிய கவிதை.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி...உன் எழுத்துக்களின் தாக்கம் என் எழுத்துக்களிலும்!

      Delete
  5. Awesomely written. I felt you could have written a few more experiences. I felt sad that it's ended so soon. I want to go back to Adanjan Mudali Street and start our lives all over again with the power to do things differently. Feeling enormously emotional at the moment. I will stop here.

    ReplyDelete
    Replies
    1. I always wished life had a rewind button!

      Delete
  6. Wow enna niyabagasakthi Bava all is true I know few on that and I have seen also great Bava

    ReplyDelete
  7. மிக அருமையான பதிவு பவானி

    ReplyDelete